மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகர் கரண் ஓபராய் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகர் கரண் ஓபராய். இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் மீது 34 வயது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2017-ம் ஆண்டு ஜனவரி முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி வரை கற்பழித்ததாக போலீசில் கடந்த மே 4-ந் தேதி புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் கரண் ஓபராயை கைது செய்து அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு கீழ் கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து கரண் ஓபராய் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கற்பழிப்பு புகாரில் சந்தேகம் இருப்பதாக கூறி கரண் ஓபராய்க்கு கடந்த 7-ந்தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் ஒரு மாதத்துக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையானார்.

இதற்கிடையே நடிகர் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் 2-வது முறையாக போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தான் ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தன்னை தாக்கி கற்பழிப்பு புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டினர் என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக 4 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, அப்பெண்ணின் முன்னாள் வக்கீல் அலிகாஷிப்கான் கூறியதால் தாக்குதல் நடத்தினோம் என்று கூறினர். இதையடுத்து அலிகாஷிப்கான் போலீசில் ஆஜராகி, இச்சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தாக்குதலை அப்பெண்தான் திட்டமிட்டு நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இதனால் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் போலீசில் பொய்யான புகாரை கொடுத்து இருப்பதும் தவறான தகவல்களை அளித்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here